சாதாரண கற்களாய் இருந்தவர்களை அழகிய
சிற்பங்களை செதுக்கிய எங்கள் பேராசிரியர்களே...
என்றென்றும் தொடரும் வாழ்க்கை பாதையில்
உங்கள் நினைவுகளும் சேர டைரி என்னும் வாழ்க்கை
புத்தகத்தில் கல்லூரியின் முதல் பக்கத்தில்
உங்கள் உரைகள் என்றும் வாழுமே...
துவண்டு போகும் நேரத்தில் கூட தூரல் போன்ற
உங்கள் வார்த்தையில் வளர்ந்த செடிகளை நாங்கள்.
உங்களோட கழிந்த நாட்களோ எங்கள் வாழ்வில் வந்த வானவில்.
வாழ்க்கைக்காக படிக்க வந்த இடத்தில்
வாழ்க்கையே படிக்க வைத்தவர்கள் நீங்கள்.
ஒவ்வொரு நாளும் உங்கள் குரல் கேட்டு கடந்த
எங்கள் நிமிடங்கள் போல் சுவை வேறொன்றுமில்லை.
அதில் கற்றறிந்த பாடமும் கண்மூடி சிரித்த சிரிப்புகளும் ஏராளம்...
ஒரு முறை கேட்ட பாடலை கூட மறுமுறை கேட்க
சோம்பல் படும் பொழுது, ஒருமுறை கூட கேட்க சலிப்பில்லாத
உங்கள் குரலை என்னாலும் மறவாது எங்கள் நெஞ்சம்...
எத்தனையோ விடைத்தாள்களை திருத்திய உங்கள்
விரல்களும் ஒருபோதும் எங்களை அடித்ததில்லை...
கல்லூரி எனும் கூண்டை விட்டு பறக்க மாட்டோமா?
என ஏங்கிய எங்களை, இந்தக் கூண்டிலேயே சிறைப்பட மாட்டோமா?
என சிந்திக்க வைத்தவர்களும் நீங்கள்...
ஆசிரியர் என்றால் யார் என்று அடையாளம் காணும் நேரத்திலே
விடைபெறும் நேரம் வந்ததே, வருத்தத்துடன்
கூறும் வார்த்தை "நன்றி". என்ற ஒரு வார்த்தை மிகையாகாது,
இருந்தாலும் கேட்கின்றோம். உங்கள் புன்னகை எனும் பூக்களை தாருங்கள்...
மேலும் எங்கள் வாழ்க்கை துளிர்விட வாழ்த்துங்கள்...
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக