21/2/20

அப்பாவின் அன்பை வேண்டும் அவள்

miss you appa kavithai
உன்னதமான உறவுகள் வாழ்வில் இல்லாவிடினும்.,
வாய்த்த உறவுகள் விநோதமாய் அமைந்துவிட்டால் வாழ்வை கடத்துவது சற்று கடினம்தான்.....

தந்தையிடும் முத்தத்தில் சாராய‌ வாடை கலந்திருப்பதில் எனக்கு வருத்தமில்லை,
முத்தமே கிடைக்கவில்லை என்பதுதான் யுகிக்கமுடியா பரிதவிப்பு....

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை இன்றளவும் உணரமுடியா அவள் எனும் நான்....

எமக்கு வாய்த்த தந்தையை கண்டு சமூகம் ஏசுவதை கேட்டு எனக்கு கோபமில்லை, இருப்பினும் என் தந்தையை இப்படி வளர்திட்ட சமூகத்தின்மீது கோபம் வராமல் இருந்துவிடுமா என்ன???

அப்பா எப்போது வருவார் என்று வாசலில் கண்வீசும் மகள்களுக்கு மத்தியில்...
என் குடிகார அப்பாவை வெளியே தள்ளி கதவடைத்த அவள் எனும் நான்.....

நான் எதிர்பார்க்கும் குணத்துடன் இனி ஒரு தந்தை எனக்கு கிடைக்கபோவதில்லை ... 
கிடைத்தாலும் அதை என் மனம் எப்படி கிரகித்துக் கொள்ளும் என்று தெரியவில்லை...

தாய்ப்பட்ட துன்பம்...
ஊர் சொன்ன சொற்கள்...
எண்ணிலடங்கா அவமானம்....
இதையெண்ணி வருந்தியதைவிட‌...

எப்போது வருவார் அப்பா
எப்போது தருவார் முத்தம்
என்பதை மட்டுமே மனம் வேண்டி விசும்புகிறது...

மேற்கண்ட வரி(லி)கள் உங்கள்‌ பார்வைக்கு....

இதோ என் தந்தைக்கு ஓரே வேண்டுகோள்...
" அப்பா நம் வீட்டில் ,நடு கூடத்தில் என்‌ பிணம் கிடக்கும் வேளையிலும் நீ உயிரோடு இருக்க வேண்டும்....

என்‌ உடலைவிட்டு பிரிந்து சென்ற என் உயிர் ,நம் வீட்டு வாசலையே பார்த்திருக்கும்....

அப்போதும் உன் முத்தத்தை வேண்டி காத்திருக்கும் அவள் எனும் நான்....."
- அரவிந்த்

0 Please share your thoughts and suggestions!: